Saturday, March 20, 2010

பணி செய்குவோம்...!

சொந்தப் பணி செய்து சுகத்தில் மிதப்போரை
மங்கப் பணி செய்குவோம் - பெயர்
தங்கப் பணி செய்குவோம்!

நற்பணி எப்பணி அப்பணி செய்வோரை
நாடித் துணை யிருப்போம் - புகழ்
பாடித் துணை யிருப்போம்!

எங்கள் பணியுடன் ஏதும் பொதுப்பணி
ஒன்றேனும் செய்திடுவோம் - அதை
நன்றெனச் செய்திடுவோம்!

எங்கும் பசிப்பிணி இல்லை என்னும்படி
நல்லநிலை அமைப்போம் - பசி
வெல்லும் நிலை சமைப்போம்!

மனிதம் எனப்படும் மாண்புறு தத்துவம்
வாழட்டும் நல்லபடி - இனி
மாளட்டும் தொல்லைகளே!

Monday, March 15, 2010

மதுவினை மதியால் ஒழித்திடுவோம்...!

குன்றினில் குறைகளே கறைகளாய்த் தொடர
குற்றங்கள் குவிந்து மதுவினால் நீள...
நெஞ்சத்து வீணைகள் துன்பத்தை மீட்டிட
நெடுந்தூரப் பயணமும் மதுவாலே மயங்கிடுதே…!

சுதியில்லா ராகமாய் சுகமில்லா மழலையாய்
சூழ்ந்திடும் ரணங்களில் விஷமுள்ள மதுவாய்
சூழ்ந்திடும் உறக்கத்தில் அரக்கனாய் மதுவே
ஆளுமை கொள்ளுது அகிலத்து உயிர்களை...!

பிணங்களின் சதைகளாய் உயிர்களும் மாற
பிடரியைத் தள்ளிடும் மதுவின் சதிகளும்
விதியினை மாத்திடும் சதிகளின் தலைவனாய்
வியாபிக்கும் மதுவினை மதியால் ஒழித்திடுவோம்...!

அந்தரங்கம் கலையாதோ...?

தாடி மீசை தான் வளர்த்து
சமரசமே கொள்கையென்று
நாடி நின்ற நல்லோர்கள்
நாட்டி வைத்த கருத்தையெல்லாம்
கேடிகளாய் வாழ்வோர்கள்
கீழ்த்தரமாய் மாற்றியதால்
வாடிவதை படுவோரை
வாழ்விப்பார் யாருளரோ...?

பக்கபலம் சிலகெட்ட
பதருகளைத் தான்சேர்த்து
மக்கள் நலம் என்றிடுவர்
மார்பு தட்டிப் பேசிடுவார்..!
தக்கவைக்கத் தங்களது
தலைமை நலம் பதவிகளை,
அக்கறையாய் செயல்படுவோர்
அந்தரங்கம் கலையாதோ...?

Monday, March 8, 2010

வாழ்க்கை..!!

குழந்தைகளின் பிறப்பு
பள்ளிக்கூடப் படிப்பு
திருமணம்
வளைகாப்பு
மறுபடியும்
குழந்தைகளின் பிறப்பு
மரணம்
இயந்திர உலகில்
எல்லாமே
மிக இயல்பாய்
போய்விட்டது
எந்த உணர்ச்சியும்
இல்லாமல்
நடைபிணமாய்
நகர்கிறது வாழ்க்கை..!!

ஓய்வு...

காற்று மட்டும்
ஓய்வு எடுத்துக் கொண்டால்
காணாமல் போய்விடுவார்கள்
மனிதர்கள்..!!

என்ன சொல்லி அழைப்பது?

எதிரே வருவது
குருடன் எனத் தெரிந்தும்
இடித்து விட்டுப் போவோரை
என்ன சொல்லி
அழைப்பது?

Wednesday, March 3, 2010

காதல் ஒரு வியாதி

இன்று
நாடெங்கிலுமுள்ள
வியாதி

ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவான
வியாதி

அரசனையும்
ஆண்டியையும்
பகைவளர்க்கும் வியாதி

மாணவனின்
கல்வியைக் கெடுத்த
வியாதி

இளைஞரின்
லட்சியத்தைச் சிதைத்த
வியாதி

மரபுடனும்
மரபை மீறியும்
வளர்ந்த வியாதி

மொத்தத்தில்
மருந்தில்லா..
மரணத்தைக் கொடுக்கும்
வியாதி