Wednesday, June 29, 2011

முரண் - 02.

நாம் ஏற்றும்
மெழுகின் வெளிச்சத்தை
வெகுவாகப் பேசுகின்றோம்...

வெளியே கிடக்கும்
நிலவின் ஒளியை
நினைப்பதே இல்லை...

படைப்பின் ரகசியம் புரிகிறது.

"கடினப்படாமல்
கைசேரும் பொருளை - நாம்
கௌரவிப்பதே இல்லை"


Friday, June 24, 2011

முரண் - 01.

பூக்கள் பூத்து
செடிகள்
தன்னை அழகுபடுத்துகின்றன..

மலர்களைப் பறித்து
மனிதன்
தன்னை அழகுபடுத்துகிறான்...

படைப்பின் ரகசியம் புரிகிறது.

"பறிப்பவர்கள்
பறிகொடுப்பவர்களைப் பற்றி
பரிதாபப்படுவதே இல்லை"


Wednesday, June 8, 2011

உன்னை நம்பு!

பஞ்ச பூதங்களின்
தொகுப்பப்பா நீ - உனக்குள்
வேறு பூதங்கள் எதற்கு?

சந்தர்ப்பங்கள் துரத்தியதால்
சங்கடத்திடம் அகப்பட்டவனா
நீ!

தாழ்வு மனப்பான்மையால்
வாழ்வில் தள்ளாடுபவனா
நீ!

சோகங்கள் சுட்டுச்சுட்டுச்
சோர்ந்து போனவனா
நீ!

சாய்ந்து கொள்ள
தோள்கள் தேடித் திரிந்தவனா
நீ!

நீ யாரானால் என்ன?

முதலில் உன்
சங்கடங்களை வழித்து
சகதியில் எறி!

கண்ணீரைத் துடைத்தெறி
விழிகளை அகலப்படுத்தி
உலகினைப் பாரு!

எழுந்து நட!

உனக்கும் வழி கிடைக்கும்!
உன்னை நம்பு!
உழைப்பை நம்பு!

குறிவைத்து வைத்து
இலக்கின் எல்லையை - உன் பாதம்
சென்று சேரட்டும்!

பிறகு தேடு நண்பனே
நீயும் சாய்ந்து கொள்ள
உனக்கும் தோள் கிடைகும்!



Monday, June 6, 2011

கந்தா நீ வரவேண்டும்!

பழநி பதியில் வாழ்பவனே! - எம்மை
பாதம் இரண்டால் ஆள்பவனே!
பழநி எனவே ஆனவனே! - என்றும்
காக்கும் உந்தன் பேரருளே!

அரக்கர் தம்மை அழித்திடவே - தேவர்
அல்லல் நீக்கி காத்திடவே
அரக்கர் தம்முடன் போரிட்டாய் - தேவர்
அல்லல் போக்கி கத்திட்டாய்!

அன்பும் அருளும் நிறைந்தவனே! - கூடும்
அல்லல் தம்மை அழிப்பவனே!
இன்பம் அனைத்தும் உன்னாலே! எம்மை
என்றும் காப்பது உன்வேலே!

இமயந் தன்னில் பிறந்தவனே! - எங்கள்
இதய மெல்லாம் நிறைந்தவனே!
உமையின் மைந்தன் ஆனவனே! - காவடி
உனக்கென எடுத்தோம்! வரவேண்டும்!