Saturday, December 1, 2012

தேடல்...

மனம்
விசித்திரமானதுதான்
விலக விலகத்தான்
ஆசைப்படுகிறது..

மரணத்தின் சுவாசத்திலும்
ஏனோ மயங்குகிறது
எதையோ கேட்கிறது
எதற்காகவோ ஆசைப்படுகிறது..

இறுதி யாத்திரையின்
முடிவான அசைவிலும்
அந்தக் கண்கள்
கனவைச் சுமக்கின்றனவே…

ஏன் தெரியுமா?
"மனிதன் தேடுகிறான்!"Thursday, November 15, 2012

மரணம்...!


ஓயாது
உழைக்கும்
மனிதனுக்குக் கிடைக்கும்
இளைப்பாறல்.!
மானிடச் செருக்கின்
முற்றுப் புள்ளி..!
Tuesday, October 11, 2011

எனக்குள்ளேயே என் எதிரி..!!

எனக்குள்ளேயே
என் எதிரி
விவேகம் இல்லாத
வேகத்தில்...

சகிப்புத்தன்மை இல்லாத
திகைப்பில்...

நினைத்தது நடக்காத
மனகசப்பில்...

நடந்ததை ஏற்காத
மடமையில்...

விரக்தியில்...
வேதனையில்...
அதிகாரத்தில்...
ஆணவத்தில்...

என்னையே அந்நியனாக்கிட
எனக்குள்ளேயே என் எதிரி.

சினம்..
சிந்திக்கமறுக்கும்.

அச்சில் ஏறாத
அர்ச்சனைகளையும்
உச்ச வரம்பில்லா
நச்சு மொழிகளையும்
ஊர்வலம் அனுப்பும்.

போன பிறகுதான் தெரியும்
வந்தது மயில் அல்ல
புயல் என்று.

ஐந்து நிமிடம்
வாய்மூடி இருந்தால்
பாய் போட்டு
பந்தி விரிக்காது.

சினம் குணமல்ல
மனம் சம்பந்தபட்டது.

ஐந்து நிமிடம்
வாய்மூடி இருந்தால்
ஆவேசக் குரங்கு
வழி பார்த்துப் போகும்
பழி பாவம் இன்றி.Monday, July 4, 2011

அஞ்சாங்கிளாஸ் லீடர்!

பங்கஜம் டீச்சருக்கு
பாயாசம் வைக்க பாசிப்பருப்பு
பல்விளக்க ஆலங்குச்சி
அடுப்பெரிக்க பருத்திமாரு

பத்மா டீச்சருக்கு எலந்த பழம்
கோணப் புளியங்கா
பிரசிடண்டு வீட்டு பசுப்பால்
எஸ்தரக்கா வீட்டு ரணிமுத்து

கண்ணுசாமி வாத்தியாருக்கு
காய்ஞ்சகடலை கத்திரிக்கா முருங்கக்கா
கீழக்கடை அரிசி முறுக்கு

இத்தனையும் அலைந்து வாங்கி
பள்ளிக்கூடம் போய் சேரும்போது மணி அடித்து
வீட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள்

பலமாதமாய் இந்த கதைதான் நடக்கிறது
ஏனோ வகுப்பறையில் நுழையும் வாய்ப்பே
கிடைக்கவில்லை ஆறுமுகத்திற்கு..

அட்டெண்டென் மட்டும் சரியாய் விழுந்துவிடும்
அந்த ஐந்தாம் கிளாஸ் லீடருக்கு..

படிக்க முடியாத வருத்தம் அவனுக்கு
ஒரு வேளை பாஸானால்
வருத்தம் வாத்தியார்களுக்கு!!

Wednesday, June 29, 2011

முரண் - 02.

நாம் ஏற்றும்
மெழுகின் வெளிச்சத்தை
வெகுவாகப் பேசுகின்றோம்...

வெளியே கிடக்கும்
நிலவின் ஒளியை
நினைப்பதே இல்லை...

படைப்பின் ரகசியம் புரிகிறது.

"கடினப்படாமல்
கைசேரும் பொருளை - நாம்
கௌரவிப்பதே இல்லை"


Friday, June 24, 2011

முரண் - 01.

பூக்கள் பூத்து
செடிகள்
தன்னை அழகுபடுத்துகின்றன..

மலர்களைப் பறித்து
மனிதன்
தன்னை அழகுபடுத்துகிறான்...

படைப்பின் ரகசியம் புரிகிறது.

"பறிப்பவர்கள்
பறிகொடுப்பவர்களைப் பற்றி
பரிதாபப்படுவதே இல்லை"


Wednesday, June 8, 2011

உன்னை நம்பு!

பஞ்ச பூதங்களின்
தொகுப்பப்பா நீ - உனக்குள்
வேறு பூதங்கள் எதற்கு?

சந்தர்ப்பங்கள் துரத்தியதால்
சங்கடத்திடம் அகப்பட்டவனா
நீ!

தாழ்வு மனப்பான்மையால்
வாழ்வில் தள்ளாடுபவனா
நீ!

சோகங்கள் சுட்டுச்சுட்டுச்
சோர்ந்து போனவனா
நீ!

சாய்ந்து கொள்ள
தோள்கள் தேடித் திரிந்தவனா
நீ!

நீ யாரானால் என்ன?

முதலில் உன்
சங்கடங்களை வழித்து
சகதியில் எறி!

கண்ணீரைத் துடைத்தெறி
விழிகளை அகலப்படுத்தி
உலகினைப் பாரு!

எழுந்து நட!

உனக்கும் வழி கிடைக்கும்!
உன்னை நம்பு!
உழைப்பை நம்பு!

குறிவைத்து வைத்து
இலக்கின் எல்லையை - உன் பாதம்
சென்று சேரட்டும்!

பிறகு தேடு நண்பனே
நீயும் சாய்ந்து கொள்ள
உனக்கும் தோள் கிடைகும்!