Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, December 1, 2012

தேடல்...

மனம்
விசித்திரமானதுதான்
விலக விலகத்தான்
ஆசைப்படுகிறது..

மரணத்தின் சுவாசத்திலும்
ஏனோ மயங்குகிறது
எதையோ கேட்கிறது
எதற்காகவோ ஆசைப்படுகிறது..

இறுதி யாத்திரையின்
முடிவான அசைவிலும்
அந்தக் கண்கள்
கனவைச் சுமக்கின்றனவே…

ஏன் தெரியுமா?
"மனிதன் தேடுகிறான்!"



Thursday, November 15, 2012

மரணம்...!


ஓயாது
உழைக்கும்
மனிதனுக்குக் கிடைக்கும்
இளைப்பாறல்.!
மானிடச் செருக்கின்
முற்றுப் புள்ளி..!




Tuesday, October 11, 2011

எனக்குள்ளேயே என் எதிரி..!!

எனக்குள்ளேயே
என் எதிரி
விவேகம் இல்லாத
வேகத்தில்...

சகிப்புத்தன்மை இல்லாத
திகைப்பில்...

நினைத்தது நடக்காத
மனகசப்பில்...

நடந்ததை ஏற்காத
மடமையில்...

விரக்தியில்...
வேதனையில்...
அதிகாரத்தில்...
ஆணவத்தில்...

என்னையே அந்நியனாக்கிட
எனக்குள்ளேயே என் எதிரி.

சினம்..
சிந்திக்கமறுக்கும்.

அச்சில் ஏறாத
அர்ச்சனைகளையும்
உச்ச வரம்பில்லா
நச்சு மொழிகளையும்
ஊர்வலம் அனுப்பும்.

போன பிறகுதான் தெரியும்
வந்தது மயில் அல்ல
புயல் என்று.

ஐந்து நிமிடம்
வாய்மூடி இருந்தால்
பாய் போட்டு
பந்தி விரிக்காது.

சினம் குணமல்ல
மனம் சம்பந்தபட்டது.

ஐந்து நிமிடம்
வாய்மூடி இருந்தால்
ஆவேசக் குரங்கு
வழி பார்த்துப் போகும்
பழி பாவம் இன்றி.



Monday, July 4, 2011

அஞ்சாங்கிளாஸ் லீடர்!

பங்கஜம் டீச்சருக்கு
பாயாசம் வைக்க பாசிப்பருப்பு
பல்விளக்க ஆலங்குச்சி
அடுப்பெரிக்க பருத்திமாரு

பத்மா டீச்சருக்கு எலந்த பழம்
கோணப் புளியங்கா
பிரசிடண்டு வீட்டு பசுப்பால்
எஸ்தரக்கா வீட்டு ரணிமுத்து

கண்ணுசாமி வாத்தியாருக்கு
காய்ஞ்சகடலை கத்திரிக்கா முருங்கக்கா
கீழக்கடை அரிசி முறுக்கு

இத்தனையும் அலைந்து வாங்கி
பள்ளிக்கூடம் போய் சேரும்போது மணி அடித்து
வீட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள்

பலமாதமாய் இந்த கதைதான் நடக்கிறது
ஏனோ வகுப்பறையில் நுழையும் வாய்ப்பே
கிடைக்கவில்லை ஆறுமுகத்திற்கு..

அட்டெண்டென் மட்டும் சரியாய் விழுந்துவிடும்
அந்த ஐந்தாம் கிளாஸ் லீடருக்கு..

படிக்க முடியாத வருத்தம் அவனுக்கு
ஒரு வேளை பாஸானால்
வருத்தம் வாத்தியார்களுக்கு!!

Wednesday, June 29, 2011

முரண் - 02.

நாம் ஏற்றும்
மெழுகின் வெளிச்சத்தை
வெகுவாகப் பேசுகின்றோம்...

வெளியே கிடக்கும்
நிலவின் ஒளியை
நினைப்பதே இல்லை...

படைப்பின் ரகசியம் புரிகிறது.

"கடினப்படாமல்
கைசேரும் பொருளை - நாம்
கௌரவிப்பதே இல்லை"


Friday, June 24, 2011

முரண் - 01.

பூக்கள் பூத்து
செடிகள்
தன்னை அழகுபடுத்துகின்றன..

மலர்களைப் பறித்து
மனிதன்
தன்னை அழகுபடுத்துகிறான்...

படைப்பின் ரகசியம் புரிகிறது.

"பறிப்பவர்கள்
பறிகொடுப்பவர்களைப் பற்றி
பரிதாபப்படுவதே இல்லை"


Wednesday, June 8, 2011

உன்னை நம்பு!

பஞ்ச பூதங்களின்
தொகுப்பப்பா நீ - உனக்குள்
வேறு பூதங்கள் எதற்கு?

சந்தர்ப்பங்கள் துரத்தியதால்
சங்கடத்திடம் அகப்பட்டவனா
நீ!

தாழ்வு மனப்பான்மையால்
வாழ்வில் தள்ளாடுபவனா
நீ!

சோகங்கள் சுட்டுச்சுட்டுச்
சோர்ந்து போனவனா
நீ!

சாய்ந்து கொள்ள
தோள்கள் தேடித் திரிந்தவனா
நீ!

நீ யாரானால் என்ன?

முதலில் உன்
சங்கடங்களை வழித்து
சகதியில் எறி!

கண்ணீரைத் துடைத்தெறி
விழிகளை அகலப்படுத்தி
உலகினைப் பாரு!

எழுந்து நட!

உனக்கும் வழி கிடைக்கும்!
உன்னை நம்பு!
உழைப்பை நம்பு!

குறிவைத்து வைத்து
இலக்கின் எல்லையை - உன் பாதம்
சென்று சேரட்டும்!

பிறகு தேடு நண்பனே
நீயும் சாய்ந்து கொள்ள
உனக்கும் தோள் கிடைகும்!



Monday, June 6, 2011

கந்தா நீ வரவேண்டும்!

பழநி பதியில் வாழ்பவனே! - எம்மை
பாதம் இரண்டால் ஆள்பவனே!
பழநி எனவே ஆனவனே! - என்றும்
காக்கும் உந்தன் பேரருளே!

அரக்கர் தம்மை அழித்திடவே - தேவர்
அல்லல் நீக்கி காத்திடவே
அரக்கர் தம்முடன் போரிட்டாய் - தேவர்
அல்லல் போக்கி கத்திட்டாய்!

அன்பும் அருளும் நிறைந்தவனே! - கூடும்
அல்லல் தம்மை அழிப்பவனே!
இன்பம் அனைத்தும் உன்னாலே! எம்மை
என்றும் காப்பது உன்வேலே!

இமயந் தன்னில் பிறந்தவனே! - எங்கள்
இதய மெல்லாம் நிறைந்தவனே!
உமையின் மைந்தன் ஆனவனே! - காவடி
உனக்கென எடுத்தோம்! வரவேண்டும்!


Monday, November 8, 2010

நவ நாகரீகம்...

முடியை சீர்படுத்தி..
முகத்தை மழித்து..
உடம்பை குளித்து..
ஆடையைச் சலவை செய்து..
காலணியைப் பளபளப்பாக்கி..
அழகாய் அணிந்து கொண்டான்..
ஆனால்,
மனதை மட்டும்..???


Sunday, October 24, 2010

நாம் காளான்கள்..

அழகிய காளான்
ஒன்று
ஆலமராத்தடியில்
குற்றுயிராக
அறுபட்டுக்
கிடந்தது...
எனக்கோ கவலை
காளான் மீதல்ல..
நம்மீது..!!

Sunday, October 3, 2010

தனித்தமிழாட்சி மலரட்டுமே...


தனித்தமிழ் இன்பத்தேனாகும்! - அது
. . . . தருதல் என்றும் சீராகும்!
தனித்தமிழ் சிதைந்தால் கேடாகும்! - அது
. . . . தமிழ்மொழிக் கென்றும் தீதாகும்!

தனிதமி ழாட்சி தீதல்ல! - இங்கு
. . . . சிலரதை எதிர்ப்பது சீரல்ல!
இனிமையே தமிழின் வளமாகும்! - இங்கு
. . . . இருப்பன தமிழின் நலனாகும்!

தனித்தமி ழின்றேல் தமிழ் கெடுமே! - மிக
. . . . செந்தமிழ் நாளும் துயர்படுமே!
தனித்தமிழ் காப்போர் வளரட்டுமே - இங்கு
. . . . தனித்தமி ழாட்சி மலரட்டுமே!

Thursday, June 17, 2010

வரதட்சணை...

சுரங்கம் தோண்டாமலே
தங்கம் எடுக்கின்றனர்
மாப்பிள்ளை வீட்டார்...

Saturday, May 29, 2010

முதிர் கன்னி...

விலை போக
முடியாமல்
விழி நீரைச்
சிந்துகிறாள்....
ஏழைத் தாயின்
வயிற்றில்
பிறந்ததால்....

Monday, May 24, 2010

நண்பர்கள்..!

மனித உறவுகளில் எல்லாம்
மகத்தானது நட்பு..!

மீளாத் துயிலில் வீழும் வரை
நில்லாமல் நீள்வது நட்பு..!

உலகளவு உயர்த்திச் சொல்ல
நட்பும் உயர்ந்தது...
நண்பர்களும் உயர்ந்தவர்கள்..!

நட்பின் முன் அணுகுண்டும்
அடங்கிப் போகும் தெரியுமா?

நட்பில் சாதியில்லை
நட்பில் மதங்கள் இல்லை
நட்பில் பேதமில்லை - அதனால்
நட்பில் குறைகள் இல்லை..!

மனங்கள் தெளிந்து கூடி
உயிரோடு கலப்பது
நட்பு..!

நம் உணர்வோடு
கலப்பவர்கள்
நண்பர்கள்..!



Monday, May 17, 2010

எனதன்புத் தந்தையே...!!

அன்புப் பொய்கையாய்
அடைக்கலக் கோட்டையாய்
பற்றுக் கோடாய்
பாதுகாவலாய்
என் விடியலுக்கு வித்திட்ட
இதய சூரியனே...!

நடக்கவே தெரியாத
என்னை
வானில்
சிறகடிக்க வைத்த
இதய தெய்வமே...!

நான் இலட்சியத்தை அடைய
உம் முதிர்ந்த அனுபவத்தை
அடித்தளமாக்கித் தந்த
என்
முதல் ஆசானே...!

என்னக்காக
நீர் செய்த
தியாகங்கள் பெரிது
என் நெஞ்சில் உமக்கிருக்கும்
இடமும் பெரிது
எனதன்புத் தந்தையே...!!

Saturday, May 15, 2010

அஞ்சலி...

அங்கே என்ன?
கூச்சல்
குழப்பம்
அடிதடி
ரகளை - அது

வேறொன்றுமில்லை...
நடந்து கொண்டிருப்பது

"மௌன அஞ்சலி"

Thursday, April 29, 2010

ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை...

உலக மொழியாம் ஆங்கிலம்
உயர் படிப்பென்றாலும்
வெளிநாட்டுப் பயணமென்றாலும்
கைகொடுத்துதவும் மொழி
அதனால் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்
அதில் தவறில்லை
அதற்காக நீ
தமிழை மறப்பது ஏனெனப் புரியவில்லை?
தெரிந்து கொள்
உனக்கு ஆங்கிலம் தெரியுமென
காட்டும் இடம்
தமிழல்ல...!

.....?....

பட்டினியால் தினமிங்கு வாடிப் - பலர்
பரிதவிக்கிறார் உணவினைத்தேடி
கொட்டம் அடிக்குது ஒரு கூட்டம் - அது
கொலு பொம்மையாய் இருப்பதில் - பெருநாட்டம்.

இம்மென்றால் இருட்டறை வாசம் - மீறி
ஏனென்றிடில் உயிர் நாசம்
பொம்மையா நீ இங்கு சொல்லு - அந்தப்
பொய்யரைப் பாடையில் அள்ளு.

சுற்றியே நிக்குது பேய்கள் - மண்ணைச்
சுடலை மேடாக்குது தீகள்
முற்றுகைக்குள் எங்கள் மூச்சா - உயிர்
பெற்ற சுதந்திர வீச்சா?

Saturday, April 10, 2010

இட்டலி...

கொதிக்கும் பாத்திரத்தில்
தகிக்கும் நிலவு...
"இட்டலி"

Monday, March 15, 2010

அந்தரங்கம் கலையாதோ...?

தாடி மீசை தான் வளர்த்து
சமரசமே கொள்கையென்று
நாடி நின்ற நல்லோர்கள்
நாட்டி வைத்த கருத்தையெல்லாம்
கேடிகளாய் வாழ்வோர்கள்
கீழ்த்தரமாய் மாற்றியதால்
வாடிவதை படுவோரை
வாழ்விப்பார் யாருளரோ...?

பக்கபலம் சிலகெட்ட
பதருகளைத் தான்சேர்த்து
மக்கள் நலம் என்றிடுவர்
மார்பு தட்டிப் பேசிடுவார்..!
தக்கவைக்கத் தங்களது
தலைமை நலம் பதவிகளை,
அக்கறையாய் செயல்படுவோர்
அந்தரங்கம் கலையாதோ...?