Thursday, February 25, 2010

அம்மா

தமிழ் அரிச்சுவடியை
கவனமாய்
வாசித்தேன்!
அந்த
இருநூற்று
நாப்பத்தேழு
எழுத்துக்களில்
மூன்று
எழுத்துக்கள் மட்டுமே
கருணையின்
உருவமாய்
விளங்கியது!
"அம்மா"

தமிழ்

எங்கோ பிறந்த
ஏனோ வளர்ந்த
ஏதோ ஒரு மொழியல்ல
தமிழ்

சிந்து வெளியின்
சின்னங்கள் கூறும்
தொன்மைத்
தமிழ்

சிந்தனையின்
சிகரங்கள் தூண்டும்
வீரத்தமிழரின்
வித்தைத்
தமிழ்

ஈரேழுலகாழும்
வீரப்புதலவர்களை
பெற்றகம் மகிழும்
தாய்த்
தமிழ்

இலக்கணக் கட்டுடல்
இலக்கியப் பட்டாடை
அழகிய திரு நுதலில்
பொட்டாய் பண்பாடு
இயல் இசை நாடகம்
இலங்கும் ஆபரணமாய்
பூண்ட தமிழ்த் தாயின்
உலகாட்சி
தமிழ்

கருக்கொண்ட
சொற்கள் கண்டதுண்டா?
தமிழில் உண்டு
தினை, பால், வழுவற்ற
செருக்குடன் மிளிரும்
செல்வ மொழி
தமிழ்

விண்ணுலகம் வியக்கும்
கோபுரங்கள்
கண் தவம் செய்த
சிற்ப ஓவியங்கள்
மண்ணில் கவிஎழுதும்
ஆடல் என
இன்னும் பல கலை வளர்த்த
பக்தி மொழி
தமிழ்

வாகை மலருக்கு ஏது
தட்டுப்பாடு
வானம் வரை இல்லை
கட்டுப்பாடு
என வேலும் வாளும்
சரித்திரம் எழுதிய
வீர மொழி
தமிழ்

காற்றை உருக்கி
காதலுக்கு தூதனுப்பி
நாற்று நடுபவரும்
நாடாளுமன்னரும்
போற்றும் குலப்
பண்பு குறையாமல்
பேசி மகிழ்ந்த
காதல் மொழி
தமிழ்

ஆதியோடு அந்தம்
இல்லாத மொழி
அலை மோதும் கடற்கோளும்
அலைக் கழிக்கும் இடம் பெயர்வும்
அழிக்க முடியாத
ஆரோக்கிய மொழி

ஆறாயிரம் ஆண்டு
தொன்மையின் சான்று
இன்னும் உறுதியாய் வாழும்
நூறாயிரம் ஆண்டு.

Sunday, February 21, 2010

மனிதன் மாறி விட்டான்...

எங்கும் லஞ்சம்
எதிலும் லஞ்சம்
தேசம் முழுதும்
மானிட பஞ்சம்...!

இங்கே மனிதன்
மாறி விட்டான்... அன்பு
இதையத்தை எங்கோ
தொலைத்து விட்டான்...!

சிந்தை தானைச்
சிதரவிட்டான்... நல்ல
பண்பைக் காற்றில்
பறக்க விட்டான்...!

இன்று

எங்கும் லஞ்சம்
எதிலும் லஞ்சம்
தேசம் முழுதும்
மானிட பஞ்சம்...!

Friday, February 19, 2010

பணம்...

பிடியுங்கள் திருடனை என்றேன்
பிடித்தார்கள் அடித்தார்கள்
"உழைத்து வாழ் என்றேன்"
பணப்பை கிடைத்துவிட்டது...!
லஞ்சமாகப் பெற்ற பணம்
அப்படியே இருந்தது...!

அழுக்கு...

எவ்வளவு சுத்தமான தெருக்களிலும்
அழுக்கோடு அலைகின்றன
மனித மனங்கள்...!

என்னக்குள் ஒரு கேள்வி?

தினமும்
என்னக்குள்
எழும் ஒரு கேள்வி...
நான்
கண்ணுறங்க போகிறேன்..!!
நாளை
விடியுமா?? விடியாதா??

என்னைச் சவுக்கால் அடியுங்கள்...

நச்சுப் பொடியைத்
தூவிவிட்டது ஹெச்1என்1
மூச்சுத் திணறலில்
உலக நாடுகள்
சங்கூது கின்றன

பங்குச் சந்தைகள்
திவாலாகின்றன
திமிங்கிலங்கள்

கரியமிலவாயு மிகையாம்
துருவங்கள் உருகலாம்
கடல்மட்டம் உயரலாம்
கலவரப்படுகிறது உலகம்

ஓசோன் படிவத்தில்
ஓட்டைகளாம்
ஒளி இழக்கப்போகின்றன
விழிகள்

வெடித்துச்
சிதறியது விமானம்
கடலுக்கடியில்
தேடப்படுகின்றன
சடலங்கள்
இதைப் பற்றியெல்லாம்
எனக்கில்லை கவலை

என் காப்பிக்கு
எவ்வளவு சர்க்கரை
என் கழுத்துச் சுளுக்கு
என் வீட்டுத்
தண்ணீர்க்குழாயில் கசிவு
இவைகள் மட்டுமே இப்போது
என்னுடைய கவலை

பூமித்தாயின்
பொறுப்பற்ற பிள்ளை நான்
தகுதியுள்ள யாராவது என்னைச்
சவுக்கால் அடியுங்கள்...!

செய்து காட்டுகிறேன்...

கேள்வியென்ன பதிலென்ன
இனி வரும் உலகு -
எங்கள் கையில் தானே,

என்ன செய்து விடுமிந்த
உலகமெனக்கு; நான்
செய்து காட்டுகிறேன்
பாரிந்த உலகிற்கு...!

நீ எனக்கு நட்பாக வேண்டும்...

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

ரசிப்பேன்...

சிறகுகள் விரிக்கும்
பறவைகளோடு நானும்
பறக்க பாடம் படிப்பேன் - மனச்

சிறகினை விரித்து
வானில் பறந்து
புவியை சுற்றி வட்டமடிப்பேன்!

மேகம் சிந்திடும்
தூரல்க ளெல்லாம் - என்
தேகத்தில் வந்து
விழட்டும் என்பேன்!

பசுமை கொஞ்சிடும்
புல்வெளி மீது - என்
சுமைகளை கொஞ்சமாய்
இறக்கி வைப்பேன்!

சோகம் சுமந்திடும்
நெஞ்சத்துள் எல்லாம்
சுகமே வந்து
சேரட்டும் என்பேன்!

இயற்கையின் மடிதனில்
கருவாய் வசிப்பேன்
இருக்கிற வரைக்கும்
புவிதனை ரசிப்பேன்!

உண்மை மட்டுமே...

வறுமை வந்து
அழைக்கும் போதும்
வாழ்வில் செம்மை மலரட்டும் - கூர்

வாளால் நாக்கை
நறுக்கும் போதும்
உண்மை ஒன்றே உரைக்கட்டும்...!

விடிவு...

பிறப்பது எல்லாம்
இறப்பது என்பது
இறைவன் வகுத்த முடிவு - அதற்குள்

காலம் கருதி
வேலை புரிந்தால்
நீயே இருட்டின் விடிவு.

ஹைக்கூ...

குரோட்டன்சுக்கு தண்ணீர் தெளித்தான்
காலில் மிதிபட்டது
மூலிகைச்செடி.

நாளை நமக்கும் மரணம்...

இன்றோ
நாளையோ
நமக்கும் மரணம்!
எம்மை
வளர்த்த நம்
சமூகத்திற்கு
பயனேதும்
தராமல்
வீண் கதை பேசி
உடலை வளர்கவே
உண்டு, உறங்கி
உண்டதை
கழிந்து...
மீண்டும் உண்டு
உண்டதை...
சே! சே!
நாமென்ன
தமிழுக்காகவும்,
தமிழனுக்காகவும்,
உரிமை போரில்
உயிர்விடவா
போகின்றோம்
வரலாற்றில்
அழிவின்றி
வாழப் போகிறோமா?
கெளரவமானவர்கள்
நங்கள்!
இன்றோ
நாளையோ
நமக்கும் மரணம்...!

விலையேற்றம்...

விளிம்பை தாண்டி
வழியாத தேநீர்,

வீண் செலவாய்
தெரிந்த விருந்து,

வான விளக்கே
போதுமென்ற முற்றம்,

சுட்ட பகலிலும்
சுழலாத மின்விசிறி,

மருந்து எதற்கென
துணிந்த காய்ச்சல்,

புதிய கொள்கையாய்
கொண்டாடா பண்டிகைகள்,

சட்டம் இயற்றாமல்
குறையும் சனத்தொகை,

பட்டினியாய் சேமிப்பு புத்தகம்
வயிறு நிரம்பிய கடனட்டைகள்,

போதி மரம் இன்றியே
ஞானம் பெற்ற
புதிய ஞானிகள்,

இவை அனைத்தும்
விலையேற்றம் தந்த
இலவச இணைப்புக்கள்,

விலையேற்றமும்
பணவீக்கமும்
கை கோர்க்கும்
மணநாளில்,

சாட்சிக் கையெழுத்திட்டு
கண் கலங்கும்
அப்பாவிப் பொது மக்கள்!

அனுமதி தாருங்கள்...

என்னக்கு...
எந்த சுதந்திரமும்
தேவையில்லை...
எழுத்து சுதந்திரத்தை
மட்டும் தாருங்கள்...!

பகல் முழுதும்
பாடு படுகிறேன்
படுத்துறங்கும் வேளையிலாவதும்
பெண்ணினத்தின்
பாரத்தை - எழுதிப்
பார்க்க விடுங்கள்..!

கட்டிலில்
கணவனை சுமப்பது
முதல்....
"கரு" வினில்
"குழந்தை" யை சுமப்பது
வரை...
அவள் படும்
அவஸ்தைகளை...

'கவிதை' யாய்
'கதை' யாய்
'கட்டுரை' யாய்
எழுத நினைத்து..
எட்டை புரட்டினால்....

என்குலத்தை - நானே
எழுதிப்பார்க்க நினைத்து
எழுத்து கோல் எடுத்தால்...

"....................
................
....................
............."

பகல் முழுதும்...
பாடு படுகிறேன்...
படுத்துறங்கும் - நேரத்தின்
இடை வேளையிலாவது...
என்...
கண்ணீருடன்...
கலந்துரையாட....
அனுமதி தாருங்கள்...!

அலங்காரம்...

புத்தம் புது
வேட்டி சட்டை
அத்தர்
ஜவ்வாது
சந்தானம்
மணக்க, மணக்க
படுத்திருந்தான்
மனிதன்...
பாடையில்...!!!

மனிதன்...

கோபம்..,
பொறமை..,
எடக்கு..,
ஏமாற்று..,
நப்பாசை..,
நயவஞ்சகம்..,
மொத்தமாகவும்,
சில்லறையாகவும்,
கிடைக்குமிடம்...!!!

"மனிதன்"

விட்டில் பூச்சிகள்...

கணினி வலைப்பின்னல் தனில்
உலகம் சுருங்கி விட்டது.

தேவைகள் ஏனோ
அதிகரித்துக் கொண்டே போகிறது....

கைகளில் சிணுங்குகிறது
கையடக்கமாய் தொலைபேசி...

வாய் முணுமுணுக்கிறது
புரியாத பாசையில் துள்ளிசைப்பாடல்...

நம்நாட்டுக் கால நிலைக்கு
சற்றேனும் ஒத்துவராத ஆடைகள்...

புருவம் முதல் தொப்புள் வரை
விதவிதமாய் ஆபரணங்கள்...

ஆறாம் விரலாய் பேனாவின் இடத்தில்
சில நொடி வாழும் புகைத்தல் சாதனங்கள்...

இவ்வாறெல்லாம்
நாகரீக முக மூடியணிந்து புன்னகைக்கிறது...

மை தடவிய இதழால்
இன்றைய சமுதாயம்...

மேலை நாட்டவரின்
வாழ்வியல் கோலம் தனை
நவ நாகரீகம் என நம்பும்
இவர்கள்
ஒளி வீசும் விளக்கை நாடிச்செல்லும்
விட்டில் பூச்சிகள்...!!!

யாழ் மண்...

பாணன் யாழ் மீட்டி
பரிசாய் பெற்ற மண்
காலங் காலமாய் - தமிழ்
மன்னர் ஆண்ட மண்.

ஈழத் திருநாட்டின்
தலையென இலங்கு மண் - தானை
தமிழ் தலைவன்
வந்துதித்த மண்

ஊதற் கடல்சூழ்ந்த
வீரம் விளைந்த மண் - வெஞ்
சமர் பல கண்டு
விழுப்புண் அடைந்த மண்

செங்குருதி படிந்த மண்
யான் பிறந்த மண் - என்
உயிரினும் மேலான
யாழ்ப்பாண மண்...!!

என்ன கண்டேன்...

தினம் தினம்
கவிதை எழுதி
என்ன
கண்டேன் - என்று
தெரியவில்லை..

ஒரு
மகிழ்ச்சி
மட்டும் மனதில்
தமிழை சுவாசிப்பதால் ...

நாங்கள் பூக்கள் பேசுகிறோம்....

மனிதனே...
இறைவன்
உங்களுக்கு
மனதை படைத்தான்....
எங்களுக்கு
மணத்தைக் கொடுத்தான்...!!

நாங்கள்
பூமியின் மேற்பரப்பில்
சிதறிக்கிடக்கும்
மாணிக்கங்கள்...
வைர
வைடூரியங்கள்..!!

நாங்கள்
எதையும்
எங்கும் யாசிப்பதில்லை...!!

தேடி வரும்
தென்றலை
மதிக்க தவறியதும் இல்லை..!!

தேசியக்கொடியின்
உச்சியில் இருந்து
உதிர்தலுக்கும்...

மணவாழ்வின்
உதயத்திற்கும்...
மங்கையரின்
கார்குழல் எழிலுக்கும்.....

இறைவனின்
திரு உருவத்திற்கும்...
மரணித்த உங்கள்
கல்லறைக்கும்....

இன்னும்
எல்லாவற்றுக்குமாய்
எங்களை
இணைத்துக் கொண்டவர்கள்
நாங்கள்.....

எங்கள்
வாழ்வையே
பிறருக்காக மட்டுமே
தியாகிக்கிறோம்......!!
நீங்கள்......???

உணர்வுகள்...

வாசனையை நுகரும் நீ..
தன்னை
வதைத்துக் கொள்ளும்
ஊதுபத்தியின் வலியை உணர்ந்ததுண்டா..?

சிலை கண்டு மயங்கும் நீ ..
செதுக்கிய போது
சேதாரமான
துணுக்குகளை எண்ணி துயருற்றதுண்டா?

சரி!
சித்திரத்தை காணும் போது
அதன்
கலை மட்டுமே கண்ணுக்கு தெரிந்தால்
நீ சராசரி மனிதன்.

மாறாக -
வரைந்து வரைந்து
கரைந்த தூரிகை
விழிகளில் விளங்கினால்
நீதான் படைக்கும் பிரம்மன்..!!!

வா நண்பனே...!!

வா நண்பனே...!!
கடலில் விழுகின்ற மழைத் துளியாய்
நட்பில் நாமே கலப்போம்..!!

ஒரு மரம் ஒரு நாளும்
தோப்பாக முடியாது..!!

ஓர் கரத்தில் எழும் ஓசை
ஒருவருக்கும் கேட்காது..!!

நீ மட்டும் தனித்திருந்தால்
உலகம் என்றாகாது..!!

வா நண்பனே
வாழும் வரை நாம்
நட்பு பேணுவோம்..!!

உலகத்தின் நட்பால்
உயிர்கள் ஜீவிக்கும்..!!
உள்ளங்களின் நட்பால்
உன்னதம் ஜீவிக்கும்..!!

மருத்துவம் சொல்கிறது...

குருதி என்பது....
உடலுக்குள்
ஓடிவிளையாடும்
திரவப் பந்து...!!

செல்களுக்கு
ஆக்சிஜன் போடவரும்
"பால்க்காரப் பையன்"

உணவுப் பொருட்களைத்
தடை இன்றி ஏற்றி செல்லும்
"கூரியர் சர்வீஸ்"

கழிவுப் பொருட்களை
உரிய இடத்தில் சேர்க்கும்
"நகராட்சித் துறை"

சீரான வெப்பநிலையை
மாறாமல் காக்கும்
"உதவும் கரங்கள்"

குருதிக் குழாய்களில்
கொழுப்பு வாடகைக்கு வந்தால்
இரத்த அழுத்தம்
மாரடைப்பு என்கிற
கதவடைப்பில் முடியும்...

உடற்பயிற்சி
கொழுப்பை குறைத்து
குருதிக்கு வேகம் தரும்..

தாவர உணவு தான்
தேவையற்ற கொழுப்பை
அப்புறப்படுத்தும்
ஒப்பற்ற மா மருந்து...!!!

மனதில் பதி - 06

எத்தனை ரகசியம் கண்டாலும்
எவரிடமும் சொல்லாது விலங்கு

ஒன்றும் இல்லாததையே
ஒன்பதாய் சொல்பவன் மனிதன்

மனதில் பதி...!
"ஆறறிவை விஞ்சும் ஐந்தறிவின் குணம்"

மனதில் பதி - 05

கார்த்திகையில் கட்டி வைத்தாலும்
மழை நிக்காது

மார்கழியில் பந்தளிட்டாலும்
பனி நிக்காது

மனதில் பதி...!
"பருவம் என்பது பயன் பெறச்செய்வது"

மனதில் பதி - 04

பாறை கடினமானது
கல்லின் பெருமை

விதை மென்மையானது
தாவரத்தின் தன்மை

மனதில் பதி...!
"வன்மையை மேன்மை வெல்லும் "

மனதில் பதி - 03

ஊருக்குச் செல்ல பேருந்துக்கு
பாதை போட்டவன் மனிதன்..!

கடலுக்கு செல்ல கங்கைக்கு
வழி சொன்னவன் யார்..??

மனதில் பதி..!
"தன் முயற்சி ஈடில்லாதது..!!"

மனதில் பதி - 02

விண்தொடும் ஆலமரம்
கண்ணுக்குத் தெரிவது..

வீழ்த்துகின்ற காற்றோ
விழி அறியாதது..

மனதில் பதி..!
"பலம் என்பது உருவிலல்ல; உணர்வில்..!!"

மனதில் பதி - 01

மடி நிறைய பணமா?
கொடுத்தால் குறைந்து விடும்..

மதி நிறைய படிப்பா
கொடுத்தால் நிறைந்து வரும்...

மனதில் பதி..!
"கொடுத்தாலும் குறையாது கல்வி..!!"

வேகம்...

இப்பொழுதெல்லாம்
என்னக்கு
காலத்தின் வேகம்
குறைந்து விட்டது
காரணம்
எண்ணத்தின் வேகம்
அதிகரித்து விட்டதால்...!

போரே போர்...!

வீட்டுக்குள் பங்கு போரே...!
வீதிக்குள் சாதிப் போரே...!
தோட்டத்தில் திருட்டுப் போரே...!
துயருக்குள் மகிழ்ச்சிப் போரே...!
ஆட்டத்தில் சுரண்டல் போரே...!
ஆட்சியில் பதவிப் போரே...!
நாட்டத்தில் உரிமைப் போராம்
நரித்தன மோதலே போர்...!

Thursday, February 18, 2010

பிறக்க வேண்டும் புது யுகம்..

இந் நாட்டில் இடம் வேண்டும்
நானும் தன் மானத்தோடு வாழ
இல்லையேல் இறப்பதே மேல்...!

சாவதற்கும் அழிவதற்கும் வழிகோலும்
ஆளுக்கொரு நீதி, சாதிக்கொரு நீதி என்றால்,
எம் நெஞ்சில் இவ் விழிவெண்ணம் மாறாவரை...!

எப்படியும் வாழ்ந்தது போதும் - இனி
இப்படித்தான் வாழ வேண்டும் என்று - நில்
இச்சமுதாயம் இனியாவதும் படித்துக்கொள்ளட்டும் பாடம்...!

எங்களை விட்டால் போதும் வாழ, எங்கள் பாட்டில்
வாழட்டும் அவர்கள், அவர்கள் பாட்டில்
யாருக்கும் யாரும் தலை வணங்க தேவையில்லை...!

இல்லையேல் பிறக்க வேண்டும் புது யுகமும் புது மனிதனும்
அவன் காட்ட வேண்டும் நல்ல நட்பு வழி
நன்மை பெற வேண்டும் நானும் நாடும் உலகமும்...!

இறுதி வரைக்கும் போராட்டம்...

புலரும் காலைப் பொழுதினிலே
புதிதாய் ஒன்றும் காணவில்லை
உலரும் ஈரத்துணிபோலே
உலகில் மனிதன் பிறப்பதுவும்;
நிலையம் மாறா தொன்றாகி
நிதமும் அல்லல் படுகின்றான்,
தொலைந்து போனதம் வாழ்வதனை
தொடர நினைத்தே அழுகின்றான்.

நெஞ்சில் துளியும் துணிவில்லை
நினைப்பது ஒன்றும் நடவாதே
அஞ்சி அடங்கி போவதனால்
ஆசைக்கு எதுவும் வேலையில்லை
பஞ்சு இத்துப் பறப்பது போல்
பாவிகள் மனமும் மோதுண்டு
மஞ்சள் நிலவும் நிறம்மாறி
மனத்தைக் குடைந்து கவி பாடும்.

பிறக்கும் போது மனிதரிலே
பிறப்பால் வந்த செல்வமெது?
இறக்கும் போது மனிதரிலே
எடுத்துச் சென்ற செல்வமெது?
இம்மைச் சுகத்தில் முதுமை வரை
இறுதி வரைக்கும் போராட்டம்,
இருக்கும் வரைக்கும் இப்பாரில்
இறைவனைத் தொழுது கையேந்து..!!

அமாவாசை...

நிலவு
வெளியே
தலை காட்ட
வெட்கப்பட்டது..!!
"அமாவாசை"

ஜனநாயகத்தில்...

ஆளும் கட்சி
எதிர்க் கட்சியானது
எதிர்க்கட்சி
ஆளும் கட்சியானது

ஜனநாயகத்தில்
எதுவும் நடக்கலாம்...!

அப்போது ஆளும் கட்சியில்
மந்திரியாய் இருந்தவர்
இப்போது எதிர்க் கட்சியில்
மந்திரியாய் இருக்கிறார்

ஜனநாயகத்தில்
எதுவும் நடக்கலாம்...!

முலாம் பூசப்பட்ட
வார்த்தைகளை நம்பி
இரவல் கனாக்காணும்
இளவரசர்களே...!!

எச்சில் கண்ணீரால்
எமாற்றிக் கொண்டிருப்பவர்களை
தேர்தல் தேர்வில்
தூக்கி எறியுங்கள்

ஜனநாயகத்தில்
இதுவும் நடக்கலாம்...!

கடவுள் வணக்கம்

அஞ்சேலெ னுங்கரந்தனை - அடி
சாயப் புடைக்கிறேன் என்று
மிஞ்சி விட்டாய் விதியே நீ - என்னை
மீறி விட்டாய் விதியே நீ
அஞ்சாத நெஞ்சத் துணிவால் - அருள்
ஆற்றல் என்னும் கடலுள்ளே
பஞ்சப் பசி பிணி இன்றி தெய்வ
பக்திப் படகினிற் சென்றேன்!

பிஞ்சும் அரும்பும் உதறும் - முது
பிஞ்சும் கனியும் உதிரும்
அஞ்சுதல் என் மட நெஞ்சே!
அசடாகி புலம்புதல் வேண்டா
வஞ்சனை நீ செய்ததுண்டா? - பிறன்
வாழ்க்கை நியதியை மாற்றுதல் நன்றா?
சஞ்சலம் விட்டொழி கென்றான் - அருட்
சக்திகனல் ஆகிய கண்ணன்!